SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, November 15, 2016

சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?

அடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் |
அமெரிக்காவில் 2016 நவம்பர் 8-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் அபார வெற்றிபெற்றார். அந்நாட்டின் 45-வது அதிபராகப் பதவியேற்கவுள்ளார். இத்தேர்தலில் அமெரிக்க மாகாணங்களிலிருந்து அதிபருக்குக் கிடைக்கும் வாக்குகளில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 228 வாக்குகளும் டொனால்டு ட்ரம்ப் 279 வாக்குகளும் பெற்றனர். அமெரிக்க அதிபராக 270 வாக்குகள் தேவை. அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர்களிலேயே அதிக வயதான டொனால்டு ட்ரம்ப், ரியல் எஸ்டேட் வர்த்தகர். 70 வயதான டொனால்டு ட்ரம்ப், முதல்முறையாக வகிக்கப்போகும் அரசுப் பதவி இது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்பார்.

மீத்தேன் திட்டம் ரத்து
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைக் கைவிடுவதாக நவம்பர் 10-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. காவிரி டெல்டாவில் உள்ள மன்னார்குடியை மையமாகக் கொண்டு, புதுச்சேரி முதல் ராமேஸ்வரம் வரையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால் 2010-ல் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 691 கிலோமீட்டர் சுற்றளவில், நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் இத்திட்டத்தால், காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் எனக் கூறி, விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டி. ஜெயராமன் ஆகியோர் மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்கள்
புதிதாக அமையவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அமெரிக்கத் தமிழர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்க உள்ளனர். நவம்பர் 8 அன்று அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலோடு, செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ், அமெரிக்கச் செனட்டின் மேல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான கமலா ஹாரிஸ், அமெரிக்கரான தந்தை டொனால்டு ஹாரிஸ் மற்றும் இந்தியத் தாயான சியாமளா கோபாலன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். கமலா ஹாரிஸின் பூர்வீகம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு தமிழரான வழக்கறிஞர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டுப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஹாக்கியில் பெண்கள் சாதனை
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டி நவம்பர் 5 அன்று நடைபெற்றது. கோப்பையைக் கைப்பற்ற இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி கோப்பையைக் கைப்பற்றியது. 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இந்திய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்ததே ஆசியக் கோப்பைப் போட்டிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்டது. இந்த ஆண்டு இந்திய ஹாக்கியைப் பொறுத்தவரை ஆண்கள், பெண்கள், என இரண்டு அணிகளும் சாம்பியன்ஷிப் கோப்பையைப் வென்றது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியா-ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்
நவம்பர் 11-ம் தேதி டோக்கியாவில் நடந்த இருதரப்பு உச்சிமாநாட்டில் ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயை பிரதமர் மோடி சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், உள்கட்டுமானம் குறித்துப் பேசினார். இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமிடையே வெகுகாலம் நிலுவையிலிருந்த சிவில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அப்போது கையெழுத்திடப்பட்டது. அடுத்த நாள் ஜப்பானின் புகழ்பெற்ற அதிவேக ஷிங்கான்சென் புல்லட் ரயிலில் ஜப்பானிய பிரதமருடன் மோடி டோக்கியோவிலிருந்து கொபே நகரத்துக்குப் பயணித்தார். மணிக்கு 240 முதல் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில் 1964-ல் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய அரசின் உதவியுடன் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக ஷிங்கான்சென் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக இரு பிரதமர்களும் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தனர். இந்த புல்லட் ரயில் பாதைக் கட்டுமானம் 2018-ல் தொடங்கி 2023-ல் நிறைவடையும்.

அங்கீகாரம் இல்லாத குழந்தை இல்லங்கள்
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 194 தனியார் குழந்தைகள் இல்லங்கள் அங்கீகாரப் பதிவின்றி செயல்படுவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் அதிர்ச்சியை தெரிவித்தது. சட்டவிரோதமான இந்த இல்லங்களில் ஆதரவற்ற குழந்தைகள் 9 ஆயிரத்து 285 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. மாவட்ட அளவில் குழந்தைகள் நல கமிட்டிகள் செயல்படும் நிலையில் சட்டவிரோதமாக குழந்தைகள் நல இல்லங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்ற கேள்வியை நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் ஆகியோர் எழுப்பினர். அரசு குழந்தைகள் நல இல்லங்களிலும் தனியார் குழந்தைகள் நல இல்லங்களிலும் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்தையும், குழந்தைகளை இழந்த பெற்றோரின் ரத்த மாதிரிகளையும் நவம்பர் 25-ம் தேதிக்குள் சேகரித்து மரபணு வங்கி ஒன்றையும் உருவாக்கி குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகளுக்கு உதவ வேண்டும் என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமாரசுவாமிக்கு உத்தரவிட்டார்.No comments:

Post a Comment