SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, October 18, 2016

நோபல் பரிசு 2016 - இயற்பியல் - பருப்பொருளின் விசித்திரங்கள்!

நோபல் பரிசு 2016 - இயற்பியல்  - பருப்பொருளின் விசித்திரங்கள்!
இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் ஜே. தவ்லெஸ், எஃப். டங்கன் எம். ஹால்டேன், ஜே. மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று இயற்பியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பிறந்து தற்போது அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் இம்மூவரும் என்பது ஒரு விசித்திர ஒற்றுமை! அதீதமான இயற்பியல் நிலைகளின்போது பருப்பொருளிடம் (matter) தென்படும் விசித்திர இயல்புகளைப் பற்றி ஆராய்ந்து கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதற்காக இவ்வாண்டில் நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையான 80 லட்சம் குரோனர்களில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 கோடி) பாதித் தொகையை டேவிட் ஜே. தவ்லெஸும் மீதிப் பாதியை எஃப். டங்கன் எம். ஹால்டேன், ஜே. மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்வார்கள். அதி-கடத்திகள் (Superconductors), அதி-திரவங்கள் (Superfluids), நுண்காந்த ஏடுகள் (Thin magnetic films) போன்ற அதீத நிலைகளில், மிகவும் அதீதமான குளிர்நிலையில் பருப்பொருள் (matter) மிகவும் விசித்திரமாக நடந்துகொள்கிறது. எடுத்துக்காட்டாக, அதி-திரவங்களுக்குச் சற்றும் பாகுத்தன்மை இருப்பதில்லை; தொடர்ந்து பாய்ந்தாலும் அவை தம் ஆற்றலை இழப்பதே இல்லை; சுழல்போல சுழல ஆரம்பித்தால் நிற்காமல் சுழன்றுகொண்டே இருக்கும். இவை எல்லாமே குவாண்டம் உலகம் எனப்படும் பருப்பொருளின் மிக மிக நுண்ணிய உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள். சாத்தியமற்றவை என்று தோன்றும் இந்த நிகழ்வுகள் குவாண்டம் உலகத்துக்குள் நுழைந்து பார்க்கும்போது மேலும் மேலும் துலக்கமாகின்றன. இதுபோன்ற பண்புகளைப் பற்றித்தான் மேற்கண்ட மூவரும் ஆய்வுகள் நிகழ்த்தினார்கள். இந்தத் துறையில் இவர்கள் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளால் ஏற்படக்கூடும் நன்மைகள், சாத்தியங்கள் ஏராளம். குறிப்பாக, குவாண்டம் கணினித் துறையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் மூலமாகப் பெரும் பாய்ச்சல் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தின் பேர்ஸ்டென் நகரில் பிறந்த தவ்லஸ் (82) கார்னல் பல்கலைக்கழகத்தில் 1958-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1965-லிருந்து 1978-வரை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கணிதம்சார் இயற்பியலைப் பயிற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் காஸ்டர்லிட்ஸும் இவரும் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார்கள். லண்டனில் பிறந்த ஹால்டேன் (65), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1978-ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரான்ஸில் உள்ள 'ஆன்ஸ்டிட்யூட் லொ-லாங்கவன்' என்ற நிறுவனம், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெல் ஆய்வகம் போன்றவற்றில் பணிபுரிந்துவிட்டு இறுதியாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1990-ல் சேர்ந்தார். ஸ்காட்லாந்தின் ஆபர்தீன் நகரில் பிறந்த காஸ்டர்லிட்ஸ் (73) உயர்-ஆற்றல் இயற்பியலில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார். பர்மிங்கான் பல்கலைக்கழகம், இத்தாலியின் டூரினில் உள்ள கோட்பாட்டு இயற்பியலுக்கான மையம், பெல் ஆய்வகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் பணியாற்றியிருக்கிறார்


மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Post a Comment