நோபல் பரிசு 2016 - மருத்துவம் - செல்'லிடச் சிறப்பு!
மருத்துவத்துக்கான நோபல் விருது ஜப்பானைச் சேர்ந்த செல் உயிரியலாளர் யோஷினோரி ஒஷுமிக்குக் (71) கிடைத்திருக்கிறது. விருது அறிவிக்கப்பட்ட பிறகு செய்தி யாளர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: 'சிறுவனாக இருந்தபோது நோபல் பரிசு என் கனவாக இருந்தது. மருத்துவ ஆராய்ச்சியில் நான் ஈடுபட ஆரம்பித்த பிறகு நோபல் பரிசு பற்றிய எந்தச் சிந்தனையும் துளிகூட என் மனதில் இல்லை.' 'உடலில் செல்கள் பிளவுறுவதைப் பற்றியும் அவை எப்படித் தங்கள் உட்கூறு களை மறுசுழற்சி செய்துகொள்கின்றன என்பதைப் பற்றியும் நிகழ்த்திய கண்டுபிடிப்பு'களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கழிவு நீர், குப்பை போன்றவற்றை மறுசுழற்சி செய்து அவற்றைப் பல்வேறு விதங்களில் நாம் பயன்படுத்திக்கொள்வதுபோலவே உடலின் செல்கள் பழுதுபட்ட, இறந்துபோன தங்கள் உட்கூறுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்கின்றன. இப்படி மறுசுழற்சி செய்ய முடியாமல் போவது பார்க்கின்ஸன் நோய் முதல் சில வகைப் புற்றுநோய்கள் வரை பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது. ஜப்பானின் ஃபுகோகா நகரில் 1945-ல் பிறந்த ஒஷுமி இளநிலை படிப்பை முடித்த பிறகு 1974-ல் நியூயார்க் சென்று அங்குள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்தார். 1977-ல் நாடு திரும்பிய அவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 'புத்தாக்க ஆய்வுகளுக்கான டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவரது ஆராய்ச்சி யீஸ்ட் செல்களில்தான் தொடங்கியது. அந்த செல்களின் சுய மறுசுழற்சிக்குக் காரணமான ஜீன்களை அவர் கண்டறிந்தார். மனித செல்களிலும் அப்படிப்பட்ட செயல்பாடு நடைபெறுகிறது என்பதையும் அவர் நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இந்தத் துறையில் எதிர்கால சாத்தியங்களும் நிறைய தென்படுகின்றன. ஏற்கெனவே, அடிப்படை அறிவியலுக்கான க்யோட்டோ விருதை 2012-ல் பெற்றிருக்கும் ஒஷுமிக்கு மற்றுமொரு கவுரவமாக இப்போது நோபலும் சேர்ந்திருக்கிறது.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment